Saturday, March 13, 2010

அத்தியாயம் 7 : உன்னை நிஜமாய் நான் காதல் செய்தேனா?

உன்னை நிஜமாய் நான் காதல் செய்தேனா?உன்னை பார்த்த அன்று ... நீ பேசிய அன்று என்ன தோன்றிவிட்டது எனக்கு உன்னை காதல் செய்ய? அப்படி ஒன்றும் பேசிவிடவில்லை நீ! உன் அறிவின் விஸ்தீரணமோ.. உன் அழகின் பிரதிபலிப்போ ஒன்றும் செய்துவிடவில்லை என்னை. உன்னை பார்த்து என்னுள் மின்சாரம் பாயவில்லை! என்றோ ஒருநாள் யோசித்து உன்னை காதல் செய்ய முடிவு செய்ய வைத்தது எது? அதை உன்னிடம் சொல்ல வைத்தது எது? துருவித்துருவி கேட்டாயே... ஒரு முட்டாள்த்தனமான கேள்விகளோடு அது கொடுத்த தைரியமா? தோழிதானே என்கிற சுதந்திரமா? ஏன் சொன்னேன் அன்று? ஒவ்வொரு நாளும் என்னை தீண்டாமல் சீண்டினாயே... உன்னை அனுமதித்தது எது? ஆண் எனும் என் மடத்தனமா? இல்லை பெண் எனும் உன் புத்திசாலித்தனமா? "தினமும் என்னை கவனி" என என்னை சுற்றி வரச்செய்தது எது? .......

உன்னை நிஜமாய் நான் காதல் செய்தேனா?
எங்கோ தொலைவில் இருந்தும் உன்னையே நினைக்க வைத்து எது? நீ வேண்டாமென்று தூக்கிபோட்ட காகிதமாய் என்னை நானே தேட செய்தது எது? நான் உன் நினைவிலும் நீ என் நினைவிலும் மெல்ல மெல்ல மறக்க செய்வது எது? உன்னை என்னிடமும் என்னை உன்னிடமும் கெட்ட கனவின் நினைவாய் ஒதுக்க வைப்பது எது?

இவை எவற்றுக்கும் என்னிடம் இல்லையம்மா பதில்.. உன்னிடமும் நிச்சயம் இருக்காது! ஆயினும் கேட்க வேண்டிய கேள்விகள் மட்டும் குறைவதே இல்லை இந்த ஆணிடம்.. ஏனெனில் முடிவெடுப்பதில் இன்னமும் தெளிவில்லை இந்த பெண்ணிடம்! உன்னை குறை சொல்லமாட்டேன்.. 19 நூற்றாண்டுகள் உன்னை அடக்கிய சமுகம் அல்லவா இதன் பொறுப்பு. நீ அல்ல...ஒரு சூறாவளியை எதிர்க்க இன்னொரு சூறாவளி உண்டாகும்போது இவையெல்லாம் சாதாரணம் தான்.. என்வலியும் உன் வழியும் ஏற்ககூடியதுதான். ஆயினும் சீக்கிரம் முடிய வேண்டும் இந்த கடும்போர் ஏனெனில் நீயும் நானும் ஒரு புதிய மழையில் நனையவேண்டிய தருணம் நெருங்குகிறது.. அங்கே என் பாரதியின் வரிகள் நிச்சயம் ஒலிக்கும் இந்த "ஆணுக்கு பெண் இளைப்பில்லை" என்று.. அன்று என் வலி மறந்திருக்கும் உன் வழி இணைந்திருக்கும்!

பின் குறிப்பு:- என்னமோ எழுத தோன்றியது இதை எழுதினேன்.. சாதாரணனின் சிந்தனை தாறுமாறாய் இருக்கும். திட்டாதீங்க வாசகர்களே!!!!

Friday, July 11, 2008

அத்தியாயம் - 6 கார்ட்டூன் பிள்ளையார், சாக்லேட் பேப்பர்…

"ஏய்! நீ இடது கையாலையும் எழுதுவியா?" ஆச்சரியமாய் கேட்டாள் அவள்.
"எப்பொழுதாவது..." புன்னகைத்தான்.
"என்ன எழுதுற...ம்ம்ம்... OUR GREATEST GLORY IS NOT IN NEVER FALLING BUT RISING EVERY TIME WE FALL. நல்லா இருக்குடா. எனக்கு இதுல உன் கையெழுத்து போட்டுக்கொடேன். ப்ளீஸ்..."
மறுப்பேதும் சொல்லாமல் போட்டு கொடுத்தான். திரும்ப ஒரு sticker பேப்பரை அவள் நீட்டினாள். அதில் பிள்ளையார் கார்ட்டூன் ஸ்டைலில் அழகாய் அமர்ந்திருந்தார்.
அதை வாங்கி ஷர்ட் பாக்கெட்டில் வைத்தபடி கேட்டான். "சரி உன் கம்ப்யூட்டர் பிரச்சினை என்ன ஆச்சு... "
"ஹ்ம்ம்..ஹ்ம்ம்... சரியாகலைடா. அப்டியே இருக்கு. உங்க டீம்ல கேட்டா கொஞ்சம் டைம் ஆகும்னு சொல்றாங்க. இங்க எனக்கு ஒரே பிரஷர்! என்ன பண்றதுன்னே தெரியல.."
"ம்ம்ம்...நான் செக் பண்றேன். சரி பண்ணி தந்தா என்ன தருவ?"
"என்ன வேணும்? "
"சாக்லேட்! "
"சரி... பண்ணல.... தொலஞ்ச நீனு.... "
சிரித்து கொண்டே கம்ப்யூட்டர் அருகில் சென்றான். என்ன சமரசம் செய்தானோ நமக்கு தெரியாது அது பவ்யமாய் அவள் எதிர்பார்த்த வேலையை செய்ய துவங்கியது.
"எப்படிடா…"
"அதெல்லாம் கேட்காதே dear...சாக்லேட்டை எடு!"
"கில்லாடிடா நீ... இந்தா 5star…"

வாங்கி கொண்டு வெளியே வந்தான். அவசர அவசரமாய் சாக்லேட்டை மென்றான்.
"டேய் மச்சி! என்ன தின்ற.."
"ஒண்ணுமில்லடா. ஒண்ணுமில்ல"
"டேய் அவன பிடி.. கைல என்ன சாக்லேட்..டேய் அது வெறும் பேப்பர்டா. நமக்கு கூட குடுக்காம தின்னுட்டாண்டா. மேல வா உன்ன என்ன பண்றேன் பாரு…"
"டேய் இல்லடா.. அது...." என்று சமாதனம் செய்ய பார்க்க...
"இத நம்ம Team leader கிட்ட சொல்றேன்.." என்று ஓடியவனை துரத்த......
"ஆபீஸ் நேரமாச்சு கிளம்பலையா" என்று அம்மாவின் குரல் கேட்டது. கலைந்து போன நினைவுகளுடன் (நிஜங்களுடன்???) பையை தூக்கி கொண்டு நடந்தான்.


"ஒரு வருசத்துக்குள்ள எவ்ளோ மாற்றம்...நம்ம வாழ்க்கையே மாறிடுச்சே...machine life...ச்சே..." வெறுத்துபோய் ஒரு கல்லை எட்டி உதைத்தான். ரயில்வே ஸ்டேஷன் வந்து மீண்டும் அதே நினைவுகள்.

ரயில் வந்து ஏறும் வரை உணர்வற்று இருந்தான். ஏறிய அந்த நொடி யாரோ பின்னே உரசிய உணர்வு. சரலேன்று கை பின் பாக்கெட்டுக்கு சென்றது. அய்யோ! பர்ஸ்... ரயில் நகர தொடங்கியது...
"சார்.. என் பர்ஸ் கீழ எங்கேயாவது விழுந்திருக்கா பாருங்களேன்... கருப்புகலர் சார்.. "
"இல்ல தம்பி...இங்க எதுவும் விழல... "
"வீட்ல வெச்சுட்டு வந்திருப்ப.. போன் பண்ணி பாருப்பா... "
"பிளட்பாரத்துலயே யாரவது அடிச்சிருப்பாங்க... "
ஆளாளுக்கு அவர்கள் கருத்தை சொன்னதோடு சரி... பர்ஸ் போய்விட்டது... கம்பார்ட்மென்ட்டில் இருந்த எல்லோரும் அவனுக்கு திருடர்கள் மாதிரி தெரிய.. இவன் எடுத்து வெச்சுகிட்டே நடிக்கிறானோ.. இவனா இருக்குமோ.. இவன்... ஹ்ம்ம்.ஹ்ம்ம்... யாரை பார்த்தும் தீர்மானிக்க முடியவில்லை... அடுத்த ஸ்டேஷன் இறங்கி ரயில்வே அதிகாரியிடம் போனான்.. அங்கிருந்து ரயில்வே போலிஸ் ஸ்டேஷன்...
"எங்க ஏரியாவில பர்ஸ் அடிக்க மாட்டாங்களே...நீங்க தான் எங்கேயாவது தவற விட்டிருபீங்க." கூட இருந்து பார்த்தது போல சொன்னார் அந்த கான்ஸ்டபிள்.
"இல்ல சார். எனக்கு என் பாக்கெட்லேர்ந்து யாரோ எடுத்த மாதிரி தான் இருந்தது."
"அப்போ ஒன்னு பண்ணுங்க. ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுங்க... பர்ஸ் கிடைக்கறது கஷ்டம் ஆனா சர்டிபிகேட் கொடுக்கிறேன்... உங்களுக்கு பேங்க் கார்டு வாங்கறதுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்."
"சரி சார்... எழுதித்தரேன்."என்றான் சற்று உடைந்து போய்.
பர்ஸ் விபரம் எழுதும்போது சற்று நிதானமாய் எழுத ஆரம்பித்தான்.
1. SBI debit card
2. Credit card
3. driving license
அப்புறம்...மனம் ஒரு பக்கம் சொல்லிகொண்டே இருந்தது...எழுதுடா முட்டாளே.. ஒரு கார்ட்டூன் பிள்ளையார், சாக்லேட் பேப்பர்... ம்ம்ம்...
உந்திய மனதை அசட்டை செய்து விட்டு கம்ப்ளைன்ட் பேப்பரை கொடுத்தான்.
வெளியே வந்து அடுத்த ரயில் பிடிக்கும் போது மனம் கிட்டத்தட்ட அழுது புரள ஆரம்பித்தது... ஐயோ! உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல... கவனம் வேண்டாம். போச்சு எல்லாம் போச்சு.. முட்டாள்..."
அன்று சொன்ன அதே சமாதானத்தை இன்றும் சொன்னான் "விடுடா.. கிடைக்கவா போகுது... போகனும்னு இருக்கு... போய்டுச்சு..."
அன்று போலவே இன்றும் மனம் கேட்காமல் அவனை திட்டி கொண்டும் அழுது கொண்டும் இருந்தது.
அவன் ஜன்னலை வெறிக்க ஆரம்பித்தான் வழக்கம்போல் ஒரு இயந்திரமாய்...

Friday, May 16, 2008

அத்தியாயம் - 5 கடவுளை நம்பினோர்...

இராத்திரி ஒரு 10 மணி இருக்கும்...ஒரே புழுக்கம், கரண்ட் வேற இல்ல. என்ன பன்றது? மாடிக்கு போய் படுத்துக்கலாம் அப்டின்னு நினைச்சு என் தம்பி பயலையும் கூட்டிட்டு போனேன் (தனியா படுத்துக்க பயம் ஹி ஹி...)

நல்ல செமையான காத்து... நிலா வெளிச்சம் அடேங்கப்பா... அப்டியே மேல பார்த்துகிட்டே என் தம்பிகிட்ட சொன்னேன்..

"டேய் சுப்பு! அதோ தெரியுது பார் பிரகாசமா ஒரு நட்சத்திரம் அதுதான் வீனஸ்! வைரம் மாதிரி இல்ல!"

"ஆமாமாம்! நல்லா பார்த்துக்கோ... இன்னும் 3000 வருஷம் கழிச்சு வீனஸ் கிரகமே இருக்காது!" அப்டின்னான்.

"3000 வருஷம் கழிச்சு நானே இருக்க மாட்டேன்... அது சரி என்ன உளர்றே... வீனஸ் எப்டி 3000 வருஷத்துல அழியும்?"

"உளறலே! 3000 வருஷத்துக்கு அப்புறம் சூரியன் ஒளி சுத்தமா போய்டும். உள்ள இருக்கிற தணல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சேர்ந்து சூரியனோட சைஸ் பெருசாகும். அப்போ முதல்ல மெர்குரி சூரியன் உள்ள போய்டும். அப்புறம் வீனஸ்."

"அப்போ பூமி?"

"அதுவும் தான்... ஆனா சூரியன் அணையும் போதே இந்த உலகத்துல நிறைய ஜீவராசி இருக்காது. மொத்தத்துல சோலார் பேமீலியே இருட்டாகிடும்..."

இன்னும் என்னவோ சொல்லிகிட்டே போனான்.. எனக்கு ஒண்ணும் புரியல. பயம் ரொம்ப வந்துடுச்சு... அச்சோ கடவுளே!!!

"டேய் சுப்பு நீ கடவுள நம்புறியா?"

"அது வேற இது வேற... கடவுள் என்னோட நம்பிக்கை! இது விஞ்ஞானம்!"

ஹ்ம்ம்ம்ம்.... ஒண்ணும் விளங்கல..சரின்னு படுத்துட்டேன்... குழப்பம் மட்டும் போகல...

மறுநாள் ராத்திரி 12 மணி...மாமாவும் நானும் தெருவுல நின்னு பேசிக்கிட்டு இருந்தோம். மறுபடி அதே கேள்வி.

"மாம்ஸ் சுப்பு நேத்திக்கு இப்படியெல்லாம் சொல்றான்!!! எனக்கு ஒரே குழப்பமா இருக்கு!"

"ஏன் உன் தம்பிக்கு இருக்கிற தெளிவு உனக்கு இல்ல?"

"அப்போ அவன் சொல்றதெல்லாம் நம்ப சொல்றியா?"

"அது விஞ்ஞான பூர்வமான செய்திதானே... அப்போ நம்பித்தான் ஆகணும்"

"இதோ பாரு மாம்ஸ் அவன் சொல்றத நம்பினா கடவுள் இல்லேன்னு ஆகிடும்... என்னால கடவுள் இல்லேன்னு நினைச்சு கூட பார்க்க முடியல!"

"உண்மை அதுதானே டா.."

"எது?"

"கடவுள் இல்லேன்றது..."

"அது உன்னோட கொள்கை... அதை என்கிட்டே திணிக்காத..."

"அதை திணிச்சாலும் ஏத்துக்க முடியாது உன்னால... நீ உணர்ந்தா தான் உண்டு.."

"அப்டி தான் கடவுளும்... நீயா உணர்ந்ததாதான்... சரியான கம்யூனிஸ்ட்...!"

"கடவுள் அப்டின்றது உன் மனதின் மாயத்தோற்றம்... நீ எதாவது செஞ்சே அப்டினா அது சரியா தப்பானு பார்க்க உனக்கு ஒரு judge தேவை. அந்த illusion தான் கடவுள்"

"இதுதான் உன்னோட கொள்கையா?"

"இல்ல... கருத்து... எடுத்துக்கிறது உன் இஷ்டம்..."

ரொம்ப லேட் ஆகிடுச்சு. அதனால தூங்க போய்ட்டேன். கேள்வி மட்டும் இன்னும் உறுத்திகிட்டே இருந்தது. கொஞ்ச நாள் கழிச்சு என் சொந்த ஊர் போயிருந்தேன்... தங்க தேர் இழுக்க குடும்பமா கிளம்பினோம்... வழக்கம் போல மது வீட்ல தான் டேரா...மதுவையும் கூப்பிட்டேன்...

"டேய் நீயும் வாடா! தேர் இழுக்கலாம்..."

"இல்ல நான் வரல"

"எனக்கு தெரியும் உனக்கு சாமி நம்பிக்கை இல்லேன்னு. ஆனா எனக்காக வா!"

"பாக்கறேன்..."

ராத்திரி எல்லாரும் வந்தாங்க... மதும்மா மதுப்பா..எல்லாரும்... இந்த பய மட்டும் வரல. எதிர்பார்த்தது தான்.

"மதுப்பா மது வரல?"

"எவ்ளோவோ சொன்னோம் வாடான்னு... கேட்டா தானே...சாமியே இல்லேங்கறான்...ஏதாவது விளக்கம் கொடுத்து எங்கள பேசவிடாம பன்றான்.. என்ன செய்யறது."

அவர சமாதான படுத்தனுமே! "மதுப்பா எனக்கு உங்களுக்கு...கடவுள் நம்பிக்கை தேவை. நமக்கு மேல ஒரு சக்தி இயங்கறதா நாம நம்பினாதான் நம்மால decision எடுக்க முடியும். நமக்கு மட்டுமில்ல பலபேருக்கு... அதனால தான் நாம நம்பற சக்திய கிருஷ்ணர், முருகர், ஜீசஸ், அல்லா, ஜீயஸ்... அப்டினெல்லாம் பாக்கிறோம். ஆனா மதுவுக்கு அவன் மாதிரி இருக்கிற சிலருக்கு அவங்க மேல இருக்கிற நம்பிக்கையே போதுமானது... அதனால தான் அவனுக்கு கடவுள் தேவை படல!"

"தேர் இழுக்க பேர் கொடுத்தவா கொஞ்சம் முன்னாடி வாங்கோ..."

"குருக்கள் கூப்பிடறார் மதுப்பா நான் போய் பார்த்துட்டு வரேன்... அப்புறம் சொல்லனும்னு தோன்றது... சொல்றேன்...நீங்க கவலை படாதீங்க! கடவுள் நம்பிக்கை மதுவுக்கு கண்டிப்பா வரும்! கடவுள் இருந்தா!"

அவர் என்ன ஆச்சர்யமா பார்த்துக்கிட்டு இருக்கும்போதே நான் ஆச்சர்யப்பட ஆரம்பிச்சேன்..."அடடா தங்க தேர்ல என்ன அலங்காரமா இருக்காரு முருகர்... முருகா எல்லோரையும் காப்பத்துப்பா..."

எல்லாத்தையும் மறந்துட்டு உற்சாகமா தேர் இழுக்க ஆரம்பிச்சேன்!

Tuesday, April 8, 2008

அத்தியாயம் - 4. 24, வாய்க்காங்கரை தெரு.

சென்னை கோயம்பேட்டில் பஸ் ஏறி டிக்கெட் வாங்கி அமர்ந்தபோது இனம் புரியாத மகிழ்ச்சி என்னுள். நீண்ட நாள் கழித்து நண்பனை கண்டால் அடையப்போகும் ஆனந்தம். ஆம் நான் என் ஊருக்கு செல்கிறேன். நாங்கள் வசித்த வீட்டை பார்க்க போகிறேன். எங்கள் தெரு பெயர் "வாய்க்காங்கரை தெரு" எங்கள் ஊரில் அநேக இடங்களை தொட்டு கொண்டு ஓடும் அகேழுமலையாறு என்ற அந்த சிறிய கால்வாயின் கரையோரம் அமைந்த தெரு என்பதால் அது வாய்க்காங்கரை தெரு ஆயிற்று. அங்கே 24 ம் எண் வீட்டில் வாடகைக்கு குடியேறிய போது என் வயது 7. ஏறக்குறைய 12 வருடங்கள் அங்கே அந்த வீட்டில் தான் வசித்தோம். தெருவில் அநேகர் பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள். சில செட்டியார், முஸ்லீம், கிறித்துவ மக்களும் வசித்து வந்தார்கள். எங்கள் தமிழ் உச்சரிப்பு சற்று மாறுபடும். தூய தமிழ் ஆங்காங்கே உறவாடும். சரி இனி என் வீட்டை பற்றி சொல்கிறேன். என் வீட்டில் வெளிக்கதவு கம்பிபோட்ட மரக்கதவு. வெளியில் இருந்து பார்த்தால் கொல்லை தெரியும். ஆனால் கொல்லைக்கும் வீட்டின் ஆரம்பத்துக்கும் ரொம்ப தூரம். சாதாரணமாக நான், மது, ஆனந்த், ராதா அண்ணா எல்லோரும் இடைப்பட்ட தூரத்தை வெகுவாக உபயோக படுத்தியுள்ளோம். கிரிக்கெட் விளையாடுவது, ஓடிப்பிடித்து விளையாடுவது இப்படியெல்லாம்... வெளிக்கதவின் மேலே மூன்று காலிங் பெல் இருக்கும். இதிலிருந்தே உள்ளே மூன்று வீடுகள் என்று யூகித்திருப்பீர்கள்.

வீட்டின் ஆரம்பத்தில் ஒரு திண்ணை இருக்கும். நானும் மதுவும் அங்கு அமர்ந்துதான் பேசுவோம். மது என் பால்ய சிநேகிதன். நாங்கள் இருவரும் திண்ணையில் அமர்ந்து வெகுநேரம் பேசுவோம். எங்கள் பாடத்தை பற்றி ஆரம்பித்து எங்கள் அறிவுக்கு எட்டிய எல்லா விஷயங்களையும் பேசுவோம். இப்போதெல்லாம் சொல்கிறீர்களே knowledge transition, எங்களுக்குள் அது அடிக்கடி நடக்கும். திண்ணையை தாண்டினால் பத்தாயம், நெல் கொட்டும் இடம். கிட்டத்தட்ட 5 அடி இருக்கும். சிலமுறை இறங்கி பார்த்திருக்கிறேன். கும்மிருட்டு என்பார்களே அப்படி இருக்கும். பத்தாயம் தாண்டினால் வலதுபுறம் ஒரு பெரிய்ய ஒற்றை மரக்கதவு இருக்கும். உள்ளே சென்றால் ஒரு பெரிய தாழ்வாரம் நான்கு அறைகள் இருக்கும். அதில் இரண்டு சமையலறைகள். இரண்டு படுக்கை அறைகள். ஒரு சமையலறையும் படுக்கையறையும் எங்களுக்கு. இன்னொன்றை owner மாமாவும் மாமியும் உபயோக படுத்தி கொண்டார்கள். மற்றபடி பார்த்தால் ஒரே குடும்பம் போல்தான்.

தாழ்வாரத்தின் நடுவே பெரிய ஊஞ்சல் கட்டியிருந்தோம். வீடு பெரிய ஒட்டு வீடு. நடு நடுவே மீடியம் சைஸ் தூண்கள் இருக்கும். வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் தூண்களை பார்க்கலாம். ஏறக்குறைய 15 தூண்கள் இருக்கும். இந்த பக்கம் தூண்கள் அந்த பக்கம் சாமி படங்கள் நடுவே ஊஞ்சல் சீ-சா ஆடும்போது எழும் சுகம் இருக்கிறதே!!! அடடா..! அதிலும் ஊஞ்சல் அதன் உயரத்தை தாண்டும்போது கீழே பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா! அது என்னமோ ஒரு சிலருக்கு பைக் ஓட்டுவது போல், கிரிக்கெட் ஆடுவது போல் எனக்கு ஊஞ்சல் ஆடுவதில் சந்தோஷம். சமையல்அறை வழியாக ஒரு கதவு உண்டு. அதன் வழியில் வந்தால் நீங்கள் மூன்றாவது வீட்டின் ரேழியை பார்க்கலாம். மூன்றாவது வீடு மாடி வீடு. அடுக்கு மாடி இல்லை. வீடு மேலே மொட்டை மாடி அவ்வளவுதான். மாடிப்படிகட்டுகளில் ஏறும்போது மட்டும் நான் விமானம் ஏறுவதாக நினைப்பேன். மாடியின் வளைவில் நின்று என்னை கலபதி என்று நினைத்துக்கொள்வேன். அந்த படிகளில் அமர்ந்துதான் காபி குடிப்பேன். மாடி வீட்டை தாண்டி கிணற்று கரை. கிணறு நிச்சயம் ஆழமானது. ஆனால் தண்ணீர் சில அடிகளிலேயே தெரியும். மழை கலாம் என்றால் இன்னும் ஜோர். ரொம்ப வாளியை கீழே இறக்க வேண்டாம். என் குளியல் வைபவம் அங்கே தான் பெரும்பாலும். வீட்டின் முன்புறம் அதாவது ஒற்றை கதவுக்கு சற்று தள்ளிய வெட்டவெளியில் ஒரு பைப்படி உண்டு. கிணற்றாங்கரைக்கு எதிரே குளியலறை உண்டு ஆனாலும் எனக்கு கரையில் குளிப்பதுதான் மகிழ்ச்சி.

அதை தாண்டி பெரிய கொல்லை வாய்க்கால் வரை நீண்டிருக்கும். கொல்லைக்கும் போனால் அங்கே ஒரு அற்புதமான தோட்டம் உங்களை வரவேற்கும். சாமந்தி பூச்செடி, ராமர் பூச்செடி, நெல்லிக்காய் மரம், தென்னை மரம், நார்த்தங்காய் மரம், வாழை மரம், மனத்தக்காளி செடி என்று ஒரு பெரிய காடே தெரியும். கொல்லையின் கடைசியில் மூங்கில் மரங்களும் அடர்த்தியாய் இருக்கும். சில கீரிகளும், பாம்புகளும் பார்த்திருக்கிறேன். நிறைய முறை கொல்லையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியிருக்கிறேன். மண்வெட்டியால் கொத்தி பல செடிகளை நட்டிருக்கிறேன். அந்த வீடு எனக்கு ஒரு விளையாட்டு திடலாக, பாடசாலையாக, ஒரு முக்கியமான உறவாக இருந்தது. owner மாமா அதை விற்ற பிறகு, நாங்களும் சென்னை வந்துவிட்டோம். இத்தனை நாள் கழித்து இப்போதுதான் நான் வாழ்ந்த வீட்டை பார்க்க செல்கிறேன். ஊர் வந்ததும் நேரே மது வீட்டுக்கு போனேன். அங்கே போய் குளித்து உடை மாற்றிக்கொண்டு கிளம்பினேன். ஒரு மகிழ்ச்சியுடன் கால் வைத்தேன் என் தெருவில். அதே பிள்ளையார் கோவில், வனத்துறை அலுவலகம், பெட்டிக்கடை, ச.மூ.இ பள்ளி சுவர் பெயிண்ட் கூட மாறாமல், மகாலிங்கர் அய்யர் வீடு எல்லாம் சரியாக அப்படியே இருந்தது. ஆனால் நான் இருந்த வீடு மட்டும் சுத்தமாக இடித்து புதியதாய் கட்டியிருந்தது. முன் வீடு, பின் வீடு, கிணறு, கொல்லை ம்ம்ம்...ஹும்... எதையும் காணோம். நீ தேடிவந்த வீடு இதுதான் என்ற அடையாளத்திற்கு மட்டும் மாடிப்படிகள் சாட்சி சொல்லின. மற்றவை எல்லாம் அடுக்கு மாடி குடியிருப்பாக இருந்தது. முன் வீடு பங்களாவாக காட்சி அளித்தது.

என் மனதில் ஏதோ ஒரு சொல்ல முடியாத வேதனையும் வெறுமையும் குடி கொண்டது. என் நண்பன் ஒருவன் என்னை கூட்டிப்போக வந்தான். சைக்கிளில் ஏறி வீட்டை கடந்தபோது என் வாழ்வின் முக்கியமான ஒரு அடையாளம் என்னிடமிருந்து அழிக்கப்பட்டதாக தோன்றியது. மீண்டும் சென்னை வந்து என் அலுவல்களை பார்க்க ஆரம்பித்தேன். எதேச்சையாய் சுஜாதா அவர்களின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" படிக்க நேர்ந்தது. அதன் தாக்கம் தான் இந்த அத்தியாயம். ஏதோ ஒரு பாரத்தை பகிர்ந்து தூக்குவதாக எண்ணிக்கொண்டு தற்சமயம் விடை பெறுகிறேன். மீண்டும் அடுத்த அத்தியாயத்தில் சிந்திப்போம்.

Friday, January 11, 2008

அத்தியாயம் - 3 முதல் முதலாக

வணக்கம் வாசகர்களே! இந்த முறை தலைப்பு சாதாரணமானது தான். ஒரு மனிதனின் வாழ்க்கை பயணத்தில் முதல் முதலாக செய்த விஷயங்கள் எல்லாம் பல திருப்பு முனையாக அமையும். சில சப்பென்று இருக்கும். அப்படி பெரிதாக பாதிக்காத சில ஹாஸ்யமான சம்பவங்களையே இங்கே தொகுத்திருக்கிறேன். படித்து உங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள்.

முதல் பள்ளித்தோழி - பெயர் ஞாபகம் இல்லை. நான் பள்ளியில் சேர்ந்த முதல் நாள் வகுப்பில் அழும்போது என்னுடன் சேர்ந்து அழுதாள். சின்ன வயதில்லையா! அவளை பார்த்தவுடன் என் தங்கை ஞாபகம் வந்தது. என் தங்கையை தான் என்னுடன் சேர்த்து இருக்கிறார்கள் என்று முடிவே கட்டிகொண்டேன். அவ்வளவுதான் அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு நானும் அழ ஆரம்பித்துவிட்டேன். இன்று நினைத்தாலும் அந்த சம்பவம் ஒரு சின்ன சந்தோஷத்துடன் புன்னகை தரும். ஆனால் அந்த நட்பு ஒருநாள் நட்பு தான். பிறகு அந்த பெண்ணை பார்த்தாகவோ பேசியதாகவோ எனக்கு நினைவில்லை.

முதல் தோழன் - ஹரி. அந்த நாளில் இவனை மாதிரி ஒரு "பொய் சொல்லி" இந்த உலகத்தில் பிறந்திருகவே முடியாது. அதே போல் என்னை போல் ஏமாளியும் இருக்கவே முடியாது. முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். அவன் என்ன சொன்னாலும் நம்பி விடுவேன். ஒரு முறை ஏதோ பேசிக்கொண்டிருந்த போது (விஷயம் நினைவில்லை) அவன் தந்தை "வீரப்பனை பிடிக்க சென்ற காவற்படையில் ஒருவர்" என்றான். அவன் தந்தை அப்போது தபால் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு கடைநிலை ஊழியர் என்று தெரிந்தும் நான் அவன் சொன்ன பொய்யை நம்பினேன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன் நான் எவ்வளவு பெரிய ஏமாளி என்று.

முதல் வெற்றி - நான் L.K.G படிக்கும்போது முதல் மதிப்பெண் எடுத்தேன். எத்தனையோ வெற்றிகள் கிடைத்தாலும் கூட அந்த வெற்றி மறக்க முடியாத முதல் வெற்றி தான்.

முதல் தோல்வி - மூன்றாம் வகுப்பில் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தேன். அரயாண்டிலும் நான் தான் முதல் மதிப்பெண் என்று பெருமை அடித்து தோல்வி அடைந்தேன். ஏனெனில் நான் ஏழாவது மதிப்பெண் வாங்கினேன். எனவே அகம்பாவம் என்பது என்ன என்ற பாடத்தை சொல்லிகொடுத்த முதல் தோல்வி என்பேன்.

முதல் ஆசை - என்னுடைய ஆறாவது வயதில் என் தந்தையிடம் ஒரு மூன்று சக்கர சைக்கிள் ஒன்று கேட்டேன். என் தந்தையும் சம்மதித்தார். யாரோ ஒருவர் சொன்ன தகவலின் பேரில் ஒரு இடத்திற்கு சென்றோம் சைக்கிள் வாங்க. அந்த கடைக்காரர் சொன்ன விலை கட்டுபடியகமல் திரும்ப வரவேண்டியதாயிற்று. அதனால் எனக்கு நினைவு தெரிந்து என்னுடைய முதல் ஆசை நிராசை தான்.

முதல் பயணம் - இதுவும் L.K.G படிக்கும்போது நடந்ததுதான். வைதீஸ்வரன்கோவில் சென்றோம் நானும் என் அன்னையும்.

முதல் பயம் - சின்ன வயதில் ஒருமுறை சென்னை வந்திருந்தேன். அப்பா அம்மாவோடு தான். எதையோ எடுத்து விளையாடி கொண்டிருந்தேன். என்னவென்று அப்போது தெரியாது. திடீரென்று என் மாமா உள்ளே நுழைந்து கதவை தாள் போட்டு என்னை அடிப்பதாக பயமுறுத்தினார். கட்டிலை சுற்றி ஓட வேண்டியதாயிற்று. இனி இந்த பொருளை தொட்டயோ தொலைந்தாய் என்று எச்சரிக்கை வேறு. அது வேறொன்றுமில்லை சீட்டு கட்டு. உபயோகம் செய்யும் முறை கூட தெரியாது. ஆனால் பயமுருத்தபட்டேன்.

முதல் திரைப்படம் - நான் பார்த்த முதல் திரைப்படம் கமல் இரட்டை வேடங்களில் நடித்த "அபூர்வ சகோதரர்கள்".

முதல் தண்டனை - எதற்கோ பொய் சொன்னேன் என்று என் அன்னை சாமி படங்களுக்கு முன்னால் தோப்பு கரணம் போட சொன்னார். அதுதான் எனக்கு கிடைத்த முதல் தண்டனை.

முதல் குறும்பு - ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது பாடி கொண்டிருந்தேன். அந்த பக்கமாய் போன பள்ளி தலைமை ஆசிரியர் என்னை அழைத்து வர சொன்னார். "பாடு அந்த பாடலை இன்னொரு முறை என்றார்" " மாமா உன் பொண்ண கொடு என்றேன்" "படவா!" என்று செல்லமாய் அடிக்க வந்தார். ஒரே ஓட்டம் தான். தப்பித்து விட்டேன்.

மேலே சொன்ன அனைத்து முதல் விஷயங்களும் உண்மையே. ஆனால் இதுவெல்லாம் என் நினைவு தெரிந்து நடந்த முதல் விஷயங்கள். என் சிறு வயதில் இன்னும் எவ்வளவோ சுவாரஸ்யங்கள் நடந்திருக்கின்றன. வரும் அத்தியாயங்களில் அவசியம் வரும்போதெல்லாம் சொல்லுகிறேன்.

மீண்டும் அடுத்த அத்தியாயத்தில் சிந்திப்போம். அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துகள்.

Thursday, December 27, 2007

அத்தியாயம் - 2 வணக்கத்துக்குரிய காதலி!

என்னடா இவனும் காதல்னு ஆரம்பிச்சுட்டான் அப்படின்னு நினைக்காதீங்க வாசகர்களே! இந்த உலகத்துல காதல் பத்தி பேசாத ஆளே கிடையாது. நாம சுவாசிக்கிற காற்றும் இந்த காதலும் ஒன்றுதான். உங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ சுவாசிக்கணும். அப்போதான் வாழ முடியும். இன்னிக்கு யாராவது உங்ககிட்ட "எனக்கு காதலே வராது" அப்படினு சொன்னா ஒன்னு அவனுக்கு பைத்தியமா இருக்கலாம் இல்ல அவன் உயிர் வாழற ஒரு ஜடம்னு வெச்சுக்கலாம். எனவே அவங்க மேல கொஞ்சம் அன்பு காட்டுங்க. சீக்கிரம் அவங்களுக்கு காதல் வரணும்னு வேண்டிக்கோங்க. உலகத்துல இருக்கிற எல்லா ஜீவன்களுக்கும் பொருந்துற ஒரு விஷயம் காதல். ஒவ்வொரு ஜீவராசியும் ஒரு வரைமுறை வெச்சுருக்கும் இப்படி தான் காதலிக்கனும்னு. அப்படிதான் மனிதனுக்கும் அவன் காதலில் ஒரு வரைமுறை இருக்கு. உடனே என்னை கேக்காதீங்க என்னடா வரைமுறைனு. நான் வேணும்னா திருத்தி சொல்றேன் "ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் காதலில் ஒரு வரைமுறை இருக்கு". அவனே வகுக்கும் வரைமுறை. தேவைப்பட்டால் என்ன திருத்தம் வேணும்னாலும் செஞ்சுக்கலாம். இப்படி காதல் என்கிற பாடம் ஒவ்வொரு விதமாய் இருக்க எனக்கு தெரிஞ்ச ஒரு காதலை பத்தி இன்னிக்கு சொல்லலாமே அப்படின்னு தான் இப்படி ஒரு தலைப்பை வெச்சேன். "வணக்கத்துக்குரிய காதலி" - நிச்சயமாய் இவள் என் காதலி அல்ல. ஆனால் எந்த ஒரு காதலர்களையும் பார்த்தவுடன் இவளை ஞாபகம் செய்து கொள்வேன். உண்மையில் நான் காதலிக்க வேண்டும் என்கிற தாக்கம் இவளை பார்த்து தான் இல்லை இல்லை இவளை பற்றி கேட்டு தான் வந்தது. எனக்கு இவள் பெயர் தெரியாது, இவளை நான் பார்த்தது கூட கிடையாது. ஆனால் இவள் காதலன் எனக்கு ஒரு வகையில் உறவினன். நல்ல அழகாய் இருப்பான். சொந்தமாய் தொழில் ஒன்று செய்து கொண்டிருந்தான். இவர்கள் காதலிக்கும்பொழுது இவர்களை பற்றி நான் கேள்வி படவே இல்லை... ஆனால் எல்லாம் முடிந்த பிறகுதான் தெரியும்... ஏதோ பெற்றோர் உற்றார் எதிர்ப்பு இருவர் தரப்பிலும். சற்று போராடி பார்த்திருக்கலாம். பையன் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டான். விஷம் குடித்து உயிர் நீத்தான். அவன் இறப்பை கேள்விப்பட்ட அந்த பெண் என்ன செய்தாள் தெரியுமா காதலன் இறந்த மூன்றாம் நாள் அவளும் உயிர் நீத்தாள். ஸ்தம்பித்து போனேன். பாராட்டுகிறேன் அவளை! உடனே என்னை தவறாக நினைக்காதீர்கள் இவன் தற்கொலையை வரவேற்கிறான் என்று. அப்படி இல்லை. சற்று சிந்தித்து பாருங்கள் இன்று எந்த பெண் தன் காதலனுக்காக இப்படி செய்கிறாள் என்று. என் பார்வையில் அந்த பெண் செய்ததை அவள் காதல் மேல் வைத்திருக்கும் மதிப்பு என்பேன். சிலர் இதை தவறென்று சொல்லலாம். காதலுக்காக சாவதா? இது ஒரு வணக்கத்துக்குரிய செயலா என வினா எழுப்பலாம். ஆனால் அவளுக்கு அந்த காதல் பெரியது, வணக்கதுகுரியது. இல்லையெனில் அவள் உயிர் விட்டிருக்க மாட்டாள் இல்லையா? இன்று எந்த ஒரு காதலர்களை பார்த்தாலும் நான் உதாரணமாய் சொல்வது இவள் காதலை தான். அதாவது இவள் மன உறுதியை தான். இவள் மன உறுதி இன்றுள்ள காதலர்களுக்கு கொஞ்சம் இருந்தாலும் போதும் அவர்கள் காதல் ஜெயமே.

பெண்ணே உன் காதலை இன்றும் ஒரு ரசிகனாய் ரசிக்கிறேன். நான் பார்க்கும் ஒவ்வோர் காதலிலும் உன் காதல் வாழும். ஏனெனில் என் காதலின் தாக்கமும் நீதான், என் காதலின் பார்வையும் நீதான், எனவே நான் ஒவ்வோர் காதலையும் உன் காதலோடு ஒப்பிட்டு பார்க்கும் போது உன் காதல் என் நெஞ்சில் வாழ்ந்து கொண்டுதானிருக்கும்.


---- மீண்டும் அடுத்த அத்தியாயத்தில் சிந்திப்போம்.-----

Thursday, December 20, 2007

அத்தியாயம் -1 அன்னையும் பிதாவும்

என் இதயம் மிக சிறியது. சிலர் சொல்வார்கள் என் மனம் கல்லையும் மலையையும் போன்றது என்று. பொய். சுத்த பொய். அது ஒரு நரம்பு. மூளையில் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ அணுக்களின் கூட்டமைப்பு. ஆனால் அது வடிவமைக்கும் உலகம், அதன் கற்பனை சக்தி கணக்கில் அடங்கா. அப்படி எனக்குள்ளும் ஒரு உலகத்தை நான் வடிவமைக்க காரணமான என் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்களே. என் அன்னை ஒரு போராளி. உலகத்தில் தன் குழந்தையை பெற்று வளர்க்கும் ஒவ்வோர் பெண்ணும் போராளியே. என்னையும் என் அக்கா தங்கை தம்பி தங்கையை வளர்க்க அவர்கள் பட்ட பாடு...அப்பப்பா... இன்றும் எங்களை பற்றி யோசிக்கிறார். என்னை எத்தனையோ பேர் சொல்கிறார்கள் நான் பொறுப்பானவன் என்று. உண்மை அதுவல்ல. என் அன்னை அப்படி எல்லோரும் சொல்லும்படி என்னை மாற்றியிருக்கிறாள். என் தந்தை... இன்று என்னோடு இல்லை ஆயினும் பல விஷயங்கள் நடக்கையில் அவர் என்னுடன் இருப்பதாகவே உணர்கிறேன். என்னையும் மீறி சில விஷயங்கள் நான் செய்கிறேன் என்றால் நான் அவர் ஆசிர்வாதங்களை வரமாய் பெற்றிருக்கிறேன் என்று நம்ப முடிகிறது. அப்படி ஒரு ரசிகரை, எல்லாவற்றையும் ரசிக்கும் ரசிகரை நான் இதுவரை கண்டதில்லை. என் தந்தையின் மேல் உள்ள பாசத்தை சுருக்கமாக சொல்ல வேண்டுமெனின்... ம்ம்ம்ம்... ஒரு விளம்பரம் பார்த்திருப்பீர்கள்...Gold winner Sunflower oil.. My Daddy Strongest... இதை கேட்க என்தந்தை இல்லை என்றாலும் இதை சொல்ல இன்னும் நான் இருக்கிறேன் என்பதில் சற்று ஆறுதல் தான். இந்த வலை பூவையும், இனி தொடுக்கும் பல பூக்களையும் என் அன்னைக்கும் பிதாவிற்கும் சமர்ப்பணம் செய்கிறேன். முடிக்கும் முன்....அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.